×

குடியரசுத் தலைவருடன் திடீர் சந்திப்பு; மோடி, அமித் ஷாவின் அடுத்த ‘மூவ்’ என்ன?.. முக்கிய கொள்கை முடிவு எடுப்பதால் அரசியல் பரபரப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்ததால், அரசியலில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிர திருத்தம் செய்வது குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் பல்வேறு விளக்கங்களை கொடுத்தாலும் கூட, இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காகப் பதவி விலகினார்.

இவ்விசயத்தில் அரசியல் ரீதியான மர்மம் இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் குடியரசு துணை தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆளுங்கட்சி தரப்பும், எதிர்கட்சி தரப்பும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி நிறைவடைந்த பிறகு, நிதி, வெளியுறவு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில், சர்வதேச அளவிலும் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 3ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தைக் காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% வரி விதிப்பதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு இந்தியாவின் பொருளாதார மற்றும் தூதரக ரீதியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிலவரத்தைப் பொறுத்தவரை, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை வரும் 13ம் தேதிக்கு பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையின் விவாதத்திற்காகக் காத்திருக்கிறது. இதனுடன், நாளை ஜம்மு – காஷ்மீரின் 370வது பிரிவை நீக்கப்பட்ட (ஆகஸ்ட் 5, 2019) ஆறாவது ஆண்டு விழாவும் வருவதால், அதுகுறித்தும் முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனால் ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து விவகாரமும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அடுத்தடுத்து திரவுபதி முர்முவைச் சந்தித்தனர். அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், இந்த சந்திப்புகளின் நோக்கம் குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. அதாவது துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அல்லது வியூகங்கள் குறித்தோ, ஒன்றிய அமைச்சரவை மாற்றம் குறித்தோ விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற முக்கிய கொள்கை முடிவுகள் வரக்கூடும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

எனினும், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்குவதை தீர்ப்பது, மணிப்பூரின் பாதுகாப்புப் பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் இருந்து விரிவான அறிக்கைகள் இல்லாததால், தற்போதைய விவாதங்கள் அனைத்தும் ஊகங்களாகவே உள்ளன. இது வழக்கமான சந்திப்பாக இருக்க வாய்ப்பிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதியை பிரதமரும் உள்துறை அமைச்சரும் சந்தித்தது டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்.
ஒன்றிய அமைச்சரவை மாற்றம்.
பொது சிவில் சட்டம் அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கொள்கை முடிவு.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்.

அமெரி்க்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட சர்வதேச விவகாரங்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து கொண்டாட்டம்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதம் நீடிப்பு.

The post குடியரசுத் தலைவருடன் திடீர் சந்திப்பு; மோடி, அமித் ஷாவின் அடுத்த ‘மூவ்’ என்ன?.. முக்கிய கொள்கை முடிவு எடுப்பதால் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Modi ,Amit Shah ,Delhi ,Interior Minister ,President ,Thraupati Murmuh ,Bihar State Assembly Election ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்...