நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

முதல் ஏஐ இன்ப்ளூயன்ஸர்

பொதுவாக இன்ஸ்டாகிராம் டிராவல் இன்ப்ளூயன்ஸர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அந்த இடங்களைப் பற்றிய தகவல்களை வீடியோவாக்கி தங்களின் பக்கங்களில் பதிவு
செய்வார்கள். ஆனால், ராதிகா சுப்ரமணியம் என்ற டிராவல் இன்ப்ளூயன்ஸர் எங்கேயும் செல்லாமல், ஓர் அறைக்குள் இருந்தபடியே இந்தியா முழுவதும் சுற்றி வந்து, டிராவல் வீடியோக்களைத் தட்டிவிடுகிறார். அதுவும் தமிழ்,ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சரளமாகப் பேசுகிறார். அவரது ஒவ்வொரு வீடியோவும் பார்வைகளை அள்ளி, வைரலாகிறது. ஒரே அறையில் அமர்ந்து எப்படி டிராவல் வீடியோ போட முடியும் என்கிறீர்களா? ராதிகா சுப்ரமணியம் பெண் அல்ல; அவர் ஒரு ஏஐ. இந்தியாவின் முதல் ஏஐ டிராவல் இன்ப்ளூயன்ஸர் இவர்தான்.

வேலையில்லா திண்டாட்டம்

சமீப நாட்களில் உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணத்துக்காக சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவத்தை அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் டிங் யுவான்சோ. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்றவர். சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சிங்கப்பூர் வந்தார். பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணல்களில் கலந்துகொண்டார். ஆனால், எங்கேயும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. கடைசியில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்வது முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.

நாய்களால் வளர்க்கப்பட்ட சிறுவன்

தாய்லாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு வயது 8. அவனது அம்மாவும், அண்ணனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். அவர்களது வீட்டில் 6 நாய்கள் இருக்கின்றன. சிறுவனுக்கு ஒரு வயதாக இருந்தபோதிலிருந்தே அவன் நாய்களிடம்தான் அதிகமாக நேரத்தைச் செலவு செய்திருக்கிறான். அம்மாவும், அண்ணனும் அச்சிறுவனைக் கவனிப்பதே இல்லை. வருடக் கணக்கில் நாய்களுடனே இருந்ததால் மனிதர்களிடம் எப்படி பேசுவது என்று கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை. நாய்களைப் போல குரைக்கின்றான். அவனைப் பற்றிய வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவிட்டது.

தூங்குவதில் சாம்பியன்

இந்தியர்கள் தூங்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. பெரும்பாலான இந்தியர்கள் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதிக நேரம் தூங்கும் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கடைசியாக போட்டியில் கலந்துகொள்ள 15 பேர் தேர்வாகினார்கள். இதில் புனேவைச் சேர்ந்த பூஜா மாதவ் என்ற பெண், தினமும் 9 மணி நேரம் என, 60 நாட்களுக்குத் தொடர்ந்து தூங்கி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இவருக்கு 9.1 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் கிடைத்திருக்கிறது.

80 வயது ஸ்கைடைவர்

உயரமான இடத்திலிருந்து, பாதுகாப்பு உபகரணங்களின் துணையுடன் டைவ் அடிக்கும் ஒரு சாகச விளையாட்டு ஸ்கை டைவிங். சமீபத்தில் ஸ்ரத்தா சௌகான் என்ற பெண் தனது மகனுடன் சேர்ந்து 10 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியிருக்கிறார். ஸ்ரத்தாவின் வயது 80 என்பதுதான் இதில் ஹைலைட். இந்தியாவின் அதிக வயதான பெண் ஸ்கைடைவர் என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிட்டார் ஸ்ரத்தா. ஹரியானாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்கைடைவிங் மைதானத்தில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் ஸ்ரத்தா.

தொகுப்பு: த.சக்திவேல்

 

The post நியூஸ் பைட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: