×

மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்; ஜனாதிபதியின் 14 கேள்விகள் குறித்து 22ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், மசோதா மீது முடிவெடுக்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையிலும் காலக்கெடு விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, அரசியலமைப்பு பிரிவு 143(1)ன்படி வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். அதில் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கையாள்வதில் பிரிவுகள் 200 மற்றும் 201ன் கீழ் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

ஜனாதிபதியின் 14 கேள்விகள் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 22ம் தேதி விசாரிக்க உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயுடன், நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

The post மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்; ஜனாதிபதியின் 14 கேள்விகள் குறித்து 22ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Governor RN ,Ravi ,Tamil Nadu Assembly ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்