×

ஏர் இந்தியா விபத்தில் விமானிகளை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: இந்திய வணிக விமானிகள் சங்கம் கண்டனம்

மும்பை: அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 260 பேர் உயிர் இழந்தனர். இந்த விமான விபத்தின் முதல் கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு(ஏஏஐபி) வெளியிட்டுள்ளது. அதில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானத்தின் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இன்ஜினின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சுகள் ரன்-ல் இருந்து ஒரே நொடிக்குள் கட் ஆப் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காக்பிட் ஒலி பதிவுகளின்படி விமானிகள் இருவரும் எரிபொருள் துண்டிப்பு குறித்து விமானத்தில் உரையாடினர். ஏன் எரிபொருளை நீ கட் செய்தாய் என்று விமானி கேட்டதும் துணை விமானி நான் அப்படி செய்யவில்லை என்று மறுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,இந்திய வணிக விமானிகள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,அந்த விமானத்தின் விமானிகள் சவாலான சூழ்நிலைகளில் தங்கள் பயிற்சி மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டனர். யூகங்களின் அடிப்படையில் விமானிகளை இழிவுபடுத்தக்கூடாது. ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்களில் வெளிவரும் ஊக கதைகள், குறிப்பாக விமானி தற்கொலை என்ற பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கட்டத்தில் அத்தகைய கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டை தெரிவிப்பது பொறுப்பற்றது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட தனிநபர்கள், குடும்பங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

The post ஏர் இந்தியா விபத்தில் விமானிகளை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: இந்திய வணிக விமானிகள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Air India ,Indian Commercial Pilots Association ,Mumbai ,Ahmedabad ,London ,Air Accidents Investigation Branch ,AAIB ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்