×

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை அறிவுறுத்தல்

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்டுகள் இணைய தளம் மூலம் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு தற்போது துணைத் தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் வரும் 25ம்தேதி (நாளை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் மேற்கண்ட இணைய தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித் தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதபோன்று, 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்விற்காக விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வரும் 26ம்தேதி (வியாழக்கிழமை) முதல் 28ம்தேதி வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹால் டிக்கெட் இ்ல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Examination Department ,Directorate of Government Examinations ,Dinakaran ,
× RELATED அமர்நாத் யாத்திரையில் 1.65 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்