×

நெல்லை – அம்பை சாலையில் தெற்கு பைபாஸ் ரவுண்டானா பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா?

*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நெல்லை : நெல்லை-அம்பை சாலையில் தெற்கு புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டி நெல்லை தெற்கு – வடக்கு புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கொக்கிரகுளம், சந்திப்பு அண்ணா சிலை, பாளை பஸ்நிலையம், என்ஜிஓ காலனி விலக்கு, மேலப்பாளையம் – ரெட்டியார்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் பயணிக்கும் வகையில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ரவுண்டானாக்களில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் நின்று கவனித்து வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சிக்னலுக்காக காத்திருக்காமல் வாகனங்கள் பல்வேறு சாலைகளில் இயக்கப்பட்டு வருவதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் தெற்கு- வடக்கு புறவழிச்சாலை, நெல்லை- அம்பை சாலை சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டையில் இருந்து புதிய பஸ்நிலையம், மேலப்பாளையம், குலவணிகர்புரம் செல்லும் வாகனங்கள் தங்குதடையின்றி இயக்கப்படுகின்றன.

ஆனால் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வரும் வாகனங்கள், அம்பாசமுத்திரம், பாபநாசம் பகுதியில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்களும், மேலச்செவல், மேலப்பாளையத்தில் இருந்து பாளை செல்லும் அரசு பஸ்களும் ரவுண்டானாவின் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயில் அருகே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் பஸ்சின் பின்னால் வண்ணார்பேட்டைக்கு வரும் கார், ஆட்டோ, பைக்குகள் ரவுண்டானா பகுதியில் திரும்பி வண்ணார்பேட்டைக்கு செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

எனவே, பாபநாசம், அம்பாசமுத்திரம், மேலச்செவல், மேலப்பாளையத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை ரவுண்டானாவில் நிறுத்துவதற்கேற்ப அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மற்ற வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் தனி வழியை ஏற்படுத்துவதோடு இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லை – அம்பை சாலையில் தெற்கு பைபாஸ் ரவுண்டானா பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Southern Bypass Roundabout ,Nellai-Ambai road ,Nellai ,Nellai South-North… ,Dinakaran ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...