சங்கராபுரம், ஜூன் 7: சங்கராபுரம் அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது 7 மாத சிசுவை எரித்த விவகாரம் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் மருந்தகம் கடந்த 27 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதில் மருந்தாளுநராக சிவா ஆனந்த் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமலேயே வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது மருந்து வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவருடன் காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருந்ததில் கர்ப்பமாகியுள்ளார்.
இதனால் கல்யாணசுந்தரம் அந்த சிறுமியிடம் கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி கருவை கலைத்துவிட்டால் நீ என்னை திருமணம் செய்துகொள்ள மாட்டாய் என்று கூறியுள்ளார். அதற்கு நிச்சயமாக மூன்று வருடத்தில் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன், இப்போது கருவை கலைத்துவிடு என்று கல்யாணசுந்தரம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தேவபாண்டலத்தில் உள்ள மருந்தகத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். பின்பு ஒரு வார காலமாக சரியான முறையில் கல்யாணசுந்தரம் சிறுமியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் கல்யாணசுந்தரத்தை அழைத்து விசாரணை செய்ததில் தேவபாண்டலம் மருந்தகத்தில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மருந்தகத்தை ஆய்வு செய்து விசாரணை செய்தனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகள் இருந்ததை கண்டெடுத்துள்ளனர். பின்பு கருக்கலைப்பு செய்த சிவா ஆனந்தனிடம் காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் சிவா ஆனந்தன் கருகலைப்பிற்காக ரூ.1 லட்சம் கேட்டதாகவும், அதில் ரூ.80 ஆயிரம் தருகிறேன் என்று ஒப்புக்கொண்டதாகவும், முதலில் ரூ.66 ஆயிரம் வாங்கிக்கொண்டு கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.
மேலும் கருக்கலைப்பு செய்து கொல்லப்பட்ட அந்த 7 மாத சிசு தேவபாண்டலம் இடுகாட்டில் தீயிட்டு கொளுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் சிவா ஆனந்தனை திருவண்ணாமலை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தேவபாண்டலம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக முறையாக மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சங்கராபுரம் அருகே அதிரடி 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது 7 மாத சிசுவை எரித்தது அம்பலம் appeared first on Dinakaran.
