ஐபிஎல் போட்டித் தொடர் வெற்றியை வசப்படுத்தியது சென்னை

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 57வது லீக் போட்டி, கொல்கத்தாவில் நேற்று நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் ஆடியது. துவக்க வீரர்களாக களத்துக்கு வந்த ரஹ்மதுல்லா குர்பாஸ், சுனில் நரைன் நிதானமாக ஆடத்துவங்கிய நிலையில் 2வது ஓவரில் குர்பாஸ்(11 ரன்) அவுட் ஆனார்.

பின்னர் இணை சேர்ந்த கேப்டன் ரகானே- நரைன் ஜோடி 58 ரன்கள் விளாசிய நிலையில், 8வது ஓவரில் சுனில் நரைன் (26 ரன்), சென்னை கேப்டன் தோனியால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகுவன்ஷி (1 ரன்), தோனியிடம் கேட்ச் தந்து நடையை கட்டினார். பின் மணீஷ் பாண்டே உள்ளே வந்தார். ரவீந்திர ஜடேஜா வீசிய 13வது ஓவரில், ரகானே 48 ரன்னில்(33 பந்து) ஆட்டமிழந்தார். அடுத்து பாண்டேவுடன் ஆண்ட்ரு ரஸல் இணை சேர்ந்தார்.

அடித்து ஆடிய ரஸல் 38 ரன்னில்(21 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) அவுட் ஆனார். நூர் அகமது வீசிய 19வது ஓவரில், ரிங்கு சிங் (9 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா, 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. மணீஷ் பாண்டே, 36, ரமண்தீப் சிங் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில், நுார் அகமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 2வது இன்னிங்சை துவங்கிய சென்னை அணி துவக்கத்தில் தடுமாறியது.

ஆனபோதும் சென்னை அணி 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக பிரவிஷ் 52 ரன், சிவம் துபே 45 ரன் எடுத்தனர். கொல்கத்தா பந்து வீச்சில் அரோரா 3 விக்கெட், ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட், மொயின் அலி 1 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த சென்னை அணி, நேற்றைய போட்டியில் 3வது வெற்றியை வசப்படுத்தியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

The post ஐபிஎல் போட்டித் தொடர் வெற்றியை வசப்படுத்தியது சென்னை appeared first on Dinakaran.

Related Stories: