மாமல்லபுரம், ஏப்.29: மாமல்லபுரம் நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 2 மாதத்துக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சிக்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் பணியாற்றி வந்த ஆணையர் சுவீதா நியமிக்கப்பட்டு, அவர் கடந்த மார்ச் 9ம் நகராட்சி அலுவலகத்தில் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சுவீதா மீண்டும் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கே இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மு.வெ.கவின்மொழி மாமல்லபுரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, அவர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் முறைப்படி 2வது பெண் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இந்திய குடிமைப்பணி தேர்வில் 546வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, நகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post மாமல்லபுரத்திற்கு புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.
