செங்கல்பட்டு, ஜன.7: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரையில் இருந்து சென்னை கோயம்பேடு கொண்டு வரப்பட்ட பன்னீர் கரும்பு, அங்கிருந்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சந்தைக்கு நேற்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கரும்பு வியாபாரம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பன்னீர் கரும்பு செங்கல்பட்டிற்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. தற்போதைய ஒரு முழு கரும்பின் விலை ரூ.50ல் இருந்து ரூ.100க்கும், துண்டு கரும்புகள் ரூ.10 முதல் ரூ.20க்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அதிகளவில் கரும்புகளை வாங்கி இருப்பதால் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பன்னீர் கரும்பு விற்பனைக்கு வந்துள்ளதால் செங்கல்பட்டு சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.
