சென்னை: சென்னை பெருநகர காவல்துறை, சட்டம் -ஒழுங்கு, குற்றங்கள் குறைப்பு, விஐபிக்கள் பாதுகாப்பு, ரோந்து போன்ற பணிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் உதவிகரமான பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதில், ஒரு பணிதான், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் 4 வீடற்ற உதவிகளற்று இருந்தவர்களை தன்னார்வலர்களுடன் சேர்ந்து மீட்டு, தகுந்த உதவிகள் வழங்கப்பட்டு அரசு தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தங்க வைத்தனர். பின்னர், உரிய விசாரணை மேற்கொண்டு காணாமல் போனவர்களின் விவரங்கள் தெரியவர உதவி மையம் மூலம் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு 2025ல் மொத்தம் 85 பேர் காணாமல் பரிதவித்தவர்களை, அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது.
அதன்படி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, உதவி மையங்கள் மூலமாக உதவி பெண்களுக்கான உதவி எண் (1091), குழந்தைகள் (1098) மூத்த குடிமக்கள் (1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்கள் (94999 57975) எஸ்எம்எஸ் அடிப்படையிலான புகார்கள் (95000 99100 மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான காவல் கரங்கள் உதவி எண் (94447 17100) உள்ளிட்ட அவசர சேவைகள் மூலம் உடனடியாக பொதுமக்களுக்கு உதவியையும், வீடற்ற உதவிகளற்ற நபர்களுக்கு உதவிட ஒருங்கிணைப்பையும் உறுதி செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 14ம் தேதி இலக்கியா (29) என்பவர் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹால்ஸ் ரோட்டில் காவல் கரங்கள் குழு மூலம் மீட்டு உடனடி விசாரணை மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் மதுரை, செல்லூரில் அவரது குடும்பத்தினரை கண்டறிந்து அவரது கணவர் அன்புவுடன் பாதுகாப்பாக மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டார்.
இதேபோன்று, பிரியா (7), ராஜலானி (43) மற்றும் சோனா சீனிவாசன் (54) ஆகியோரை அவர்களது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் கண்டறிந்து மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டனர். கடந்த 13ம் தேதி முதல் நேற்று வரை 18 ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டும் 4 பேர் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டனர். 3 பேர் மனநல சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 5 பேர் உடல்நிலை சரியில்லாதவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர உரிமை கோரப்படாத 48 உடல்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் ெசய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் 8,207 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 5,575 பேர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், 1,298 பேர் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
972 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். 463 பேர் மனநல சிகிச்சை பெற்று குடும்பத்தினருடன் மீண்டும் சேர்க்கப்பட்டனர். 362 பேர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட காவல் கரங்கள் உதவி மையம் கைவிடப்பட்ட மற்றும் வீடற்ற 8,200க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளது. மேலும் காவல் கரங்கள் பிரத்யேக ஹெல்ப்லைன் எண் 9444717100 மூலம் 24 மணி நேரமும் தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசு மருத்துவமனைகள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு காப்பகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் காவல் கரங்கள் உடனடி பராமரிப்பு மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆதரவையும் வழங்குகிறது. வீடற்ற அல்லது கைவிடப்பட்டவர்களை துயரத்திலிருந்து மீட்டு பராமரிப்பதில் உதவ, காவல் கரங்கள் உதவி எண்ணை (94447 17100) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளில் 8,207 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 5,575 பேர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், 1,298 பேர் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
The post கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னையில் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 8,207 பேர் மீட்பு: கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.