கோடைமழை, சூறைக்காற்றில் சேதமான மக்காச்சோளம், கோழிப்பண்ணையை பார்வையிட்டு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்

*விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு

பெரம்பலூர் : கோடை மழை சூறைக்காற்றுக்கு மக்காச்சோளம் நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து விட்டன. கோழிப்பண்ணை கொட்டகையும் சேதமடைந்ததால் நேரில் ஆய்வுசெய்து நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் சேர்ந்த ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (21ம் தேதி) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுக்கா, பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடியாளர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத்தலைவர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் திரண்டு வந்து கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் இறவை பாசனத்தில் பயிர்செய்த மக்காச்சோளம் பயிர்கள் கோடைமழை மற்றும் சூறைக் காற்றால் கை. களத்தூர் கிராமத்திலும், பசும்பலூர், பிம்பலூர் கிராமங்களிலும் மற்றும் குன்னம் தாலுகாவில், கீழப்புலியூர் வடக்கு வருவாய் கிராமம், துணை கிராமம் கே. புதூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் தரையோடு சாய்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் அப்பகுதியில் அமைத்திருந்த கோழிப்பண்ணைகள் கோடை மழையால் தரைமட்டமாகியுள்ளது. குறிப்பாக கோழி பண்ணைகளுக்கு அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு உடைந்து நொறுங்கி விட்டன.

மேலும் குடும்பத்தார் கிராமத்தில் நெல் மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் தரையோடு சாய்ந்து விட்டன. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர், வேளாண்மைத் துறையினர் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதற்கு உரிய இழப்பீட்டினைப் பெற தமிழக அரசுக்கு முறையாக பரிந்துரை செய்து, தேவையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கோடைமழை, சூறைக்காற்றில் சேதமான மக்காச்சோளம், கோழிப்பண்ணையை பார்வையிட்டு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: