கசப்பான இனிப்பு… கார்பைடு மாம்பழங்கள்

சிவகாசி, ஏப். 22: தற்போது மாம்பழ அறுவடைசீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அனைத்து பழக்கடைகளிலும் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகையான இந்த மாம்பழங்களை மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மக்கள் விரும்பி சாப்பிடும் மாம்பழங்கள் அனைத்தும் இயற்கையாக பழுத்தது தானா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அறுவடைக்குப்பின் மாங்காய் இயற்கையாக பழுக்க வைக்க குறைந்தது ஒரு வாரம் வரையாகும். ஆனால் மக்களின் நாட்டத்தை உடனடி காசாக்கும் பேராசையில் சில வியாபாரிகள், மாம்பழத்தை கார்பைடு கல் மூலம் செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.

இப்பொழுதெல்லாம் மக்களுக்கு இயற்கையாக பழுத்த பழத்தை உண்பதற்கு பொறுமை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த கார்பைடு கல் வைத்தால் சுமார் 6 முதல் 9 மணி நேரத்தில் காய்கள் பழுத்துவிடும். இதை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்தப்பழங்களை வாங்கி உண்ணும் மக்களின் உடல்நலத்தை பற்றி வியாபாரிகள் கவலைப்படுவதில்லை. தற்போது மாம்பழம் சீசன் ஆரம்பித்துள்ளதால் கிராமம் கிராமமாக வேன்களில் பல வகையான மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மரங்களில் இயற்கை முறையில் பழுக்க அதிக நாட்கள் ஆவதால், முற்றிய காய்களை பறித்து கார்பைடு மற்றும் ரசாயன பவுடர் தெளித்து விரைவில் பழுக்க வைக்கப்படுகிறது.

அவ்வாறு பழுத்த பழங்களை வாங்கி சாப்பிடும் மக்கள் சுவையில்லாமல் உள்ளது எனவும், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது எனவும் புகார் தெரிவித்துள்ளனர். அதனால் தேனி மாவட்டத்தில் வாரச் சந்தை, வேன்களில் விற்பனை செய்யப்படும் பழங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள், ரசாயனம் தடவிய பழங்களை விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கசப்பான இனிப்பு… கார்பைடு மாம்பழங்கள் appeared first on Dinakaran.

Related Stories: