மதுரை, ஏப்.17: மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்தவர்கள் முருகன் – பாண்டி செல்வி தம்பதியினர். இவர்களது மகன் வினோத்குமார்(23). மகள் வினோதினி. வினோத்குமார் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த நிலையில், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது ஆசைக்காக, தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு டூவீலரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையில் கிடந்த தென்னை மட்டையில் ஏறி இறங்கியதில் டூவீலர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் டூவீலரை ஓட்டிச் சென்ற அவரது நண்பருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், டூவீலர் பின்னால் அமர்ந்திருந்த வினோத்குமார் கிழே விழுந்தபோது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்தார். கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வினோத்குமார் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதன்பேரில் வினோத்குமாரின் ஒரு சிறுநீரகம் மற்றும் கண்களின் கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமவனைக்கும், கல்லீரல் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், தானமாக வழங்கப்பட்டு, அவரது உடல் உறுப்புகள் 5க்கும் மேற்பட்டவர்களது மறுவாழ்விற்கு உதவியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு டீன் அருள் சுந்தரேஸ்குமார் தலைமையில் டாக்டர்கள், உரிய மரியாதையுடன் குடும்பத்தாரிடம் வினோத்குமார் உடலை ஒப்படைத்தனர். தமிழக அரசு சார்பிலும் மாவட்ட நிர்வாகம் இளைஞரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தது.
The post போலீஸ் அதிகாரி ஆகும் லட்சியத்தில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை இளைஞர் சாலை விபத்தில் மூளைச்சாவுக்கு ஆளான சோகம்: சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு appeared first on Dinakaran.
