மெரினா கடற்கரையில் குளிரூட்டப்பட்ட நூலகம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, ஏப். 17: சென்னை மெரினா கடற்கரையில் இயங்கி வந்த மெரினா கிளை நூலகம், நூலக நிதியில் இருந்து ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் செலவில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரைப் பகுதியில் அவர்களை ஈர்க்கும் வகையில் முகப்பு பகுதியுடன், நூலகத்தின் சுற்றுச் சுவர் உயர்த்தப்பட்டுள்ளது. நூலகத்தின் முன்பகுதியில் மூங்கில் வளைவுடன் கூடிய பாதை அமைத்து இருபுறமும் வசதியான இருக்கைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலகத்தில் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், பட விளக்கக் கதைப் புத்தகங்கள் அடங்கிய காமிக்ஸ் கார்னர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளை நூலகத்தில் சென்னை நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளிட்ட 7500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 1337 உறுப்பினர்களும், 3 புரவலர்களும் இந்த நூலகத்தில் உள்ளனர். புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அந்த நூலகத்தின் வளர்ச்சிக்காக ரூ.1000 நிதி வழங்கி நூலகத்தின் புதிய புரவலர்களாக தங்களை இணைத்துக் ெகாண்ட 9 பேருக்கு புரவலர் சான்றுகளையும் துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், பொது நூலகத்துறை இயக்குநர் சங்கர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் தலைவர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மெரினா கடற்கரையில் குளிரூட்டப்பட்ட நூலகம்: துணை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: