தலையணையால் அமுக்கி போலீஸ்காரரின் தாய் கொலை: ஏழரை பவுன் நகையுடன் இளம்பெண் கைது


உடன்குடி: போலீஸ்காரரின் தாயை தலையணையால் அமுக்கி கொன்று நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தேரிப்பனையை சேர்ந்தவர் வசந்தா (70). அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்துவிட்டார். சபிதா என்ற மகளும், வினோத், விக்ராந்த் என இரு மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. விக்ராந்த், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதுடன், தேரிப்பனை அருகே ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார். வசந்தா மட்டும் தேரிப்பனை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வசந்தா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை தட்டியும் திறக்கவில்லை.

உடனடியாக விக்ராந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது வசந்தா தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் செயின் மற்றும் கம்மல் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் மாயமாகியிருப்பது தெரிய வந்தது. நேற்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், ஏழரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மூன்றரை வயது சிறுவனை கொன்றவர்


போலீஸ்காரரின் தாயை கொன்ற இளம்பெண் செல்வரதி, கடந்த 2015 ஏப்ரல் மாதம் பக்கத்து வீட்டில் பணத்தை திருடியுள்ளார். அப்போது மூதாட்டி ஒருவர் பார்த்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வரதி, மூதாட்டியின் பேரன் அபிஷேக் என்ற மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளிக் கொலை செய்தார். இவ்வழக்கு விசாரணை, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்தான், தற்போது மூதாட்டி வசந்தாவை கொலை செய்து நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

The post தலையணையால் அமுக்கி போலீஸ்காரரின் தாய் கொலை: ஏழரை பவுன் நகையுடன் இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: