நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 8ம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர், நடந்தே சென்று போலீசில் சரண் அடைந்தார். நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கின. 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். முதல் பாடவேளை சமூக அறிவியல் என்பதால், அப்பாட ஆசிரியை வகுப்பெடுத்து விட்டு, வெளியே சென்றுள்ளார். அப்போது இரு மாணவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு மாணவர் தனது பேக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரை வெட்டினார். இதில் அவருக்கு தலை, தோள்பட்டை, முதுகு, கை என 4 இடங்களில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து ஓய்வறைக்கு சென்ற சமூக அறிவியல் ஆசிரியை ரேவதி ஓடிவந்து அரிவாளோடு நின்ற மாணவரை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் இடது கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் அந்த வகுப்பறையில் திரண்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன், ஆசிரியை இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் அரிவாளால் வெட்டிய மாணவர், நேராக நடந்தே பாளையங்கோட்டை காவல்நிலையம் சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார். இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெட்டுப்பட்ட மாணவர் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
பென்சில் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மாணவர் வெட்டப்பட்டதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஆசிரியை ரேவதியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையே சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
3வது சம்பவம்: ரவுடிகளின் வீடியோவே மோதலுக்கு காரணம்
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், வைகுண்டத்தில் பஸ்சில் வந்த பள்ளி மாணவனுக்கும், நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தற்போது நெல்லை தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன், ஆசிரியையை வெட்டிய சக மாணவன் பிடிபட்டுள்ளார். இதேபோல், ராமநாதபுரம் நகர் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் நேற்று தேர்வு முடிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, வெளி நபர்களை கூட்டி வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
தென்மாவட்டங்களில் இதேபோன்று மாணவர்கள் மோதி கொள்வதற்கு முக்கிய காரணமே தென்மாவட்ட ரவுடிகளின் ரீல்ஸ் வீடியோதான் என்று கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் பல்வேறு ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள்தான் பெரிய ஆள், கெத்து போன்ற பெயரை வாங்க கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஜாதி சார்ந்த வீரவசனம் பேசும் வீடியோக்களை ரீல்ஸாக வெளியிடுகின்றனர். இதை பார்க்கும் மாணவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்து மோதி கொள்கின்றனர். பள்ளிக்கு புத்தகத்தை எடுத்து செல்லும் பையில் அரிவாளை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. எனவே, மாணவர்களின் இந்த மனநிலையை மாற்ற அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புத்தகம் சுமந்த பையில் ‘அரிவாள்’
உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ் கூறுகையில், “பென்சில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புத்தகப் பையில்தான் அரிவாள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி வகுப்பறைகளில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக புத்தக பையில் இருந்த அரிவாள் கண்டறியப்படவில்லை’’ என்றார். பள்ளிக்கு புத்தகப் பையுடன் வர வேண்டிய மாணவர்கள் கூடவே அரிவாளையும் சுமந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு கவுன்சலிங்
நெல்லை மாநகர துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் கூறுகையில், ‘‘வகுப்பறையில் நடந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் நடந்த வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மனரீதியிலான கவுன்சலிங் அளிக்கப்படும். வெட்டிய மாணவரும் இளம்வயது என்பதால் அவருக்கும் கவுன்சலிங் வழங்கப்படும்’’ என்றார்.
பென்சில் பிரச்னைதான் காரணமா? வெட்டுப்பட்ட மாணவனின் பெற்றோர் பேட்டி
மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தை அறிந்து பாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர் நேற்று பள்ளி முன்பு திரண்டனர். பள்ளியின் வெளியேயும், உள்ளேயும் குவிக்கப்பட்டிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவனின் பெற்றோர் கூறுகையில், ‘‘அரிவாள் வெட்டுக்கு பென்சில் பிரச்னை மட்டுமே காரணம் என்பதை நம்ப முடியவில்லை. வீட்டில் இருந்து திட்டமிட்டு அரிவாள் கொண்டு வரும் அளவுக்கு இப்பிரச்னை முற்றியுள்ளது. எனது மகனும், வெட்டியவரும் முன்பு நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர்.
2 மாதத்திற்கு முன்பு பென்சில் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதான் பிரச்னை என்றால் முன்பே பள்ளி நிர்வாகம் பேசி தீர்த்திருக்க வேண்டும். இப்போது எனது மகனுக்கு தரமான சிகிச்சை அளிப்பதோடு, உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவனுக்கு பாதுகாப்பும் வழங்கிட வேண்டும். காவல்துறை இந்த பிரச்னை குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.
The post நெல்லை தனியார் பள்ளியில் மோதல்; 8ம் வகுப்பு மாணவன், ஆசிரியைக்கு வகுப்பறையில் அரிவாள் வெட்டு: சக மாணவன் போலீசில் சரண் appeared first on Dinakaran.