மாற்றுத்திறனாளிகள் 2,50,987 பேருக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்


சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 55ன் கீழ் சங்ககிரி சுந்தரராஜன் (அதிமுக) கவனஈர்ப்பு கொண்டு வந்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்போது ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டாலும், 65 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் வாகனம் வழங்குவதற்கு பதில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அரசு வழங்க வேண்டும்‘‘ என்றார்.

இதற்கு பதில் அளித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் நோயினால் பாதிக்கப்பட்டோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் அடுத்த மாதமே பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 2,50,987 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாற்றுத்திறனாளிகள் 2,50,987 பேருக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: