‘பூர்வி’, ‘மிருதங்’, ‘சந்தூர்’ என்று பாடப்புத்தக பெயர்கள் ‘இந்தி’ மொழிக்கு மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி முடிவால் சர்ச்சை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது (என்.சி.இ.ஆர்.டி), தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் பலவற்றிற்கு, இந்தியில் என்.சி.இ.ஆர்.டி பெயர் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், ஆங்கில வழிப் பாடப் புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக ஒரு புத்தகம் எந்த மொழியில் வெளியிடப்படுகிறதோ, அந்த மொழியிலேயே பெயர் சூட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கையில் ஆங்கில மொழியில் இருக்கும் பாடப்புத்தகங்களை இந்தியில் பெயரை மாற்றியது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்களின் பெயர்கள் முன்பு ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்ப்’ என்று இருந்தன. ஆனால், இம்முறை இரண்டு வகுப்புகளுக்குமான ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘பூர்வி’ என இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கான புதிய ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘மிருதங்’ என்றும், 3 மற்றும் 4ம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘சந்தூர்’ என்றும், பிற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் புத்தகங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பிற்கு முன்பு ‘Mathematics’ என்று இருந்தது.

இம்முறை இந்தி மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு ‘கணித் பிரகாஷ்’ (Ganit Prakash) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு கணிதத்திற்கு, ‘கணித மேளா’ (Maths Mela) என்றும், 6ம் வகுப்பு கலை பதிப்புக்கு ‘கிருதி 1’ என்றும், 3ம் வகுப்பு உடற்கல்விக்கு ‘கேல் யோக்’ என்றும், 6ம் வகுப்பு உடற்கல்விக்கு ‘கேல் யாத்ரா’ என்றும், 6ம் வகுப்பு தொழில்கல்விக்கு ‘கவுஷல் போத்’ என்றும் இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘பூர்வி’, ‘மிருதங்’, ‘சந்தூர்’ என்று பாடப்புத்தக பெயர்கள் ‘இந்தி’ மொழிக்கு மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி முடிவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: