முதல்முறையாக நாளை மறுநாள் முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 16ம் தேதி நடத்தவுள்ளார். தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், பல்கலைக்கழகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

துணைவேந்தர்கள் நியமனம், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை கவனித்து வந்த ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சக நிர்வாகத்தில் நேரிடையாக தலையீடு செய்து வந்தார். இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தமுடியாமலும் இருந்து வந்தன. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் யுஜிசி விதிகளில் ஒன்றிய அரசு சில திருத்தங்கள் கொண்டு வந்தது.

இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநரின் அத்துமீறலை தடுத்து நிறுத்தும் நோக்கோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகவும், தமிழ்நாட்டுபல்கலைக் கழகங்களுக்கு இனி முதல்வரே வேந்தராக செயல்படவும் சட்டமசோதா கொண்டு வரப்பட்டது. இவை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்களை ஏற்க மறுத்த ஆளுநர் இதை, காலதாமதம் செய்யும் வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரியும், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் இதுகுறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்ததுடன், இந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து தீர்ப்பு கூறியது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்பட வழிவகை ஏற்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து, இந்த சட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் கூட்டத்தை கூட்டி உயர்கல்வித்துறைக்கான ஆலோசனைகளை நடத்த உள்ளார். வருகிற 16ம் தேதி மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.

The post முதல்முறையாக நாளை மறுநாள் முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: