திருவாரூர், ஏப். 10; திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நாளை நடைபெறும் பாததரிசன நிகழ்ச்சியையொட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.
கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்டது. இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டுவருகிறது. கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்பத்திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்டமானது பல்லாயிரகணக்கான பக்தர்களின் ஆரூராதியாகேசா பக்தி கோஷம் விண்ணதிர நடைபெற்றது.
அதன் பின்னர் ஆழித்தேரிலிருந்து தியாகராஜர் தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ராஜநாராயன மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், நேற்றிரவு சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில் உற்சவரான தியாகராஜரின் பாதத்தினை ஓராண்டில் பங்குனி உத்திரம் மற்றும் மார்கழி மாத திருவாதிரை என 2 தினங்கள் மட்டுமே பக்தர்கள் காண முடியும். அதன்படி நடப்பாண்டில் இந்த பங்குனி உத்திர தின விழாவானது நாளை (11ந் தேதி) நடைபெறும் நிலையில் அன்று காலை 6 மணி முதல் பதஞ்சலி வியாக்கிர பாத மகரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.
இன்று (10ந் தேதி) இரவு 8.30 மணியளவில் பங்குனி உத்திர மகாஅபிஷேகமும் நடைபெறும். பின்னர் நாளை காலை பாத தரிசனம் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.
வழக்கமாக இந்த பாத தரிசன நிகழ்ச்சிக்கு திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலலே நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜரை வழிபடுவார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்தியாகராஜன், உதவி ஆணையர் சொரிமுத்து, செயல் அலுவலர் கவியரசு மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.
The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நாளை காலை 6 மணி முதல் பாததரிசனம் appeared first on Dinakaran.