குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ‘நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்’ என குமரி அனந்தன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தனது அயராத உழைப்பால் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொண்டாற்றினார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் கலைஞர் இதுகுறித்து குறிப்பிடும்போது, “தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்” எனப் புகழாரம் சூட்டினார். விடுதலை நாள் விழாவில் ‘தகைசால் தமிழர்’ விருதினை வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது.

அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன். ‘தகைசால் தமிழர்’ குமரி அனந்தன் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மரியாதையுடன் உடல் தகனம்: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக குமரி அனந்தன் உடல் வைக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் சென்னை வடபழனி ஏவிஎம் மின்மயானத்துக்கு குமரி அனந்தனின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மின்மயானத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநரும் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் இருந்தனர்.

* மோடி, ராகுல்காந்தி இரங்கல்
பிரதமர் மோடி: குமரி அனந்தன் குறிப்பிடத்தக்க சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவையாளரான இவர், எம்.பி., எம்.எல்.ஏ., என இரு தரப்பிலும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, முன்னாள் முதல்வர் காமராஜரின் பெருமைமிக்க சீடராக விளங்கினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

The post குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: