பீகாரில் பயங்கரம்; ஒன்றிய அமைச்சரின் பேத்தி சுட்டுக்கொலை:கணவர் வெறிச்செயல்

கயா: பீகாரில் ஒன்றிய அமைச்சர் ஜிதன் மஞ்சியின் பேத்தி கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக இருப்பவர் ஜிதன்ராம் மஞ்சி. பீகார் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர். இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் நிறுவனர். கயா மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது பேச்சி சுஷ்மா தேவி. இவர்கள் கயா மாவட்டம் அத்ரி தொகுதிக்கு உட்பட்ட டெதுவா கிராமத்தில் வசித்து வந்தார்.

சுஷ்மா தேவி, அவரது குழந்தைகள் மற்றும் சகோதரி பூனம் குமாரி ஆகியோர் நேற்று வீட்டில் இருந்தனர். அப்போது வேலை முடிந்து வீடு திரும்பிய சுஷ்மா கணவர் ரமேஷ் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் சுஷ்மா பலியானார்.

மற்றொரு அறையில் இருந்த பூனம் மற்றும் சுஷ்மாவின் குழந்தைகள் அவர்கள் இருந்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்த போது சுஷ்மா ரத்த வெள்ளத்தில் பலியாகி இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அவரை சுட்டுக்கொன்ற கணவர் ரமேஷ் லாரி டிரைவராக உள்ளார். பாட்னாவில் இருந்து லாரி ஓட்டிக்கொண்டு அங்கு வந்த போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது. அதற்குள் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கயா மூத்த எஸ்பி ஆனந்த்குமார் தெரிவித்தார். சுஷ்மாவும், ரமேஷும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பீகாரில் பயங்கரம்; ஒன்றிய அமைச்சரின் பேத்தி சுட்டுக்கொலை:கணவர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: