பல்கலைக் கழகங்களின் முந்தைய வரலாறு: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவில் மாநில ஆளுநர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக (Chancellor) நியமிப்பது ஒரு கொள்கையாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கும் நடைமுறை, மாநிலத்தின் தனித்தனி பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. இது இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, குறிப்பாக 1950களில் தொடங்கியது என்றாலும், முதன்மையான சட்டம் மதராசா பல்கலைக்கழக சட்டம், 1923 (The Madras University Act, 1923), இது தான் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு சட்டப் பின்னணி அமைத்த முதல் சட்டங்களில் ஒன்று. இந்தச் சட்டத்தின் படி, ஆளுநர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார். அவர் துணைவேந்தர்களை நியமிக்கவும், சில முக்கியக் கல்லூரிக் கவுன்சில்களில் தலைமை ஏற்பதற்கும் அதிகாரம் பெற்றவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
1956ல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைக்கப்பட்டது. இது உயர் கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் ஒரு தேசிய அமைப்பாக இருந்தாலும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தது. தமிழ்நாட்டில் 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 22 மாநிலப் பல்கலைக் கழகங்கள், செயல்படுகின்றன. இவற்றில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் வேந்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான நோக்கம், நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளிலிருந்து பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக தக்க வைத்தல் என்றாலும், இன்று இது ஒரு விவாதமான விஷயமாக மாறியுள்ளது.
குறிப்பாக பன்வாரிலால் புரோகித், ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்வதில் ஆளுநர், மாநில அரசின் கருத்தை அறியாமல் வெளி மாநிலங்களில் இருந்து நபர்களை தேர்வு செய்து பல்கலைக் கழக துணை வேந்தர்களாக நியமனம் செய்தார். இதனால் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாக காரணமாக வழி வகுத்தது. அவருக்குப் பிறகு தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அதே நிலைப்பாட்டை கையில் எடுத்து, துணை வேந்தர் நியமனங்களிலும் பல்கலைக் கழக நிர்வாகத்திலும் தலையிட்டு பல்வேறு முடிவுகளை எடுத்தார். அதனால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் மீண்டும் கருத்து மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஏனெனில் ஆளுநரின் அதிகாரம் கல்விக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி, பொதுப் பல்கலைக் கழகங்களில் வேந்தரின் பங்கு பொதுவாக மாநில ஆளுநரால் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் சில மாநிலங்களில் ஏற்பட்ட உரசல்களால் வேந்தர் பதவி குறித்து ஆராய்ந்து அதில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தன. அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில், கொல்கத்தா பல்கலைக் கழகம் மற்றும் ஜாவ்பூர் பல்கலைக் கழகம் உள்பட 31 மாநில பொதுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமிக்க 2022ம் ஆண்டில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் இதற்கான ஒப்புதலை வழங்காமல் கிடப்பில் போட்டார். அதே நேரத்தில், மகாராஷ்ட்ராவில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான செயல்முறைகளை அந்த மாநில அரசு திருத்தியது. அந்த மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பெயர்களை கொண்ட குழுவில் இருந்து தான் ஆளுநர் துணை வேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.
ஆளுநரின் பங்கு என்பது பல்கலைக்கழக பட்டங்களை வழங்குவது, கவுரப் பட்டங்களை வழங்குவதற்கான முன்மொழிவுகளை வேந்தராக இருக்கும் ஆளுநர் உறுதிப்படுத்துவது, பல்கலை அமைப்புகளுக்கு தலைமை தாங்குவது, நீதிமன்றம், செனட் போன்ற பல்வேறு பல்கலைக் கழக அமைப்புகளின் கூட்டங்களுக்கு ஆளுநர் தலைமை தாங்குதல் போன்ற பணிகள் ஆளுநரான வேந்தருக்கு இருக்கிறது. இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை சுற்றியுள்ள விவாதம் விருப்புரிமை, மற்றும் சுயாட்சி பிரச்னைகளை மையமாகக் கொண்டது. ஆளுநரின் பங்கு என்பது அரசியல் அமைப்பு விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்று சர்க்காரியா மற்றும் பூஞ்சி கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும்.
இந்நிலையில்தான், தமிழ்நாடு அரசு, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க, வேந்தர் பதவியை மாநில முதல்வரிடம் மாற்றும் சட்டத்திருத்தங்களை முன்மொழிந்தது. அதாவது 2022ல் சட்டமன்றம் ஒரு திருத்த சட்டம் கொண்டு வந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை ஒன்றிய அரசிடம் அனுப்பப்பட்டது. இதுதவிர தமிழகத்தில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாடு புதிய பல்கலைக் கழகம் அமைப்பதற்கென பல்வேறு சட்டத்திருத்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி அனுப்பியது. அவற்றில் முதன்மையானது, பல்கலைக் கழக வேந்தராக மாநில முதல்வர்களே இருக்கச் செய்யும் மசோதா தான். ஆனால் இந்த மசோதாக்கள் அனைத்தையும் தமிழக ஆளுநர் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி கிடப்பில் போட்டதுடன், நாட்டின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து காலம் கடத்தினார் என்பது தான் தமிழ்நாட்டின் பெரிதாக வெடித்த பிரச்னை. பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக ஆளுநர் நடந்து கொண்டது பெரும் பிரச்னையாக வெடித்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் பல முறை விவாதித்தும் ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டது.
இதுவரை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசு பல்கலைக்கழகங்களில், மாநில ஆளுநரே வேந்தராக இருக்கிறார். ஆனால், இதை மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இறுதியாக இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்துக்கு தமிழ்நாடு அரசு எடுத்து சென்றது. தற்போது உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டு அரசின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து மேற்கண்ட மசோதாக்களுக்கு தானே ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர மற்ற மாநிலங்களுக்கும் உள்ள அதிகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மூலம், தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே இனி வேந்தராக இருப்பார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக இருப்பது யார் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி வேந்தராக இருப்பார் என்ற நிலை உருவாகியுள்ளது.
சர்க்காரியா, பூஞ்சி கமிஷன்கள் சொல்வதென்ன?
ஆளுநரின் பங்கு என்பது பல்கலைக் கழக பட்டங்களை வழங்குவது, கவுரப் பட்டங்களை வழங்குவதற்கான முன்மொழிவுகளை வேந்தராக இருக்கும் ஆளுநர் உறுதிப்படுத்துவது, பல்கலை அமைப்புகளுக்கு தலைமை தாங்குவது, நீதிமன்றம், செனட் போன்ற பல்வேறு பல்கலைக் கழக அமைப்புகளின் கூட்டங்களுக்கு ஆளுநர் தலைமை தாங்குதல் போன்ற பணிகள் ஆளுநரான வேந்தருக்கு இருக்கிறது. அத்துடன் துணை வேந்தர்களை நியமிப்பது என்று இருக்கிறது. இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை சுற்றியுள்ள விவாதம் விருப்புரிமை, மற்றும் சுயாட்சி பிரச்னைகளை மையமாகக் கொண்டது. ஆளுநரின் பங்கு என்பது அரசியல் அமைப்பு விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்று சர்க்காரியா மற்றும் பூஞ்சி கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன.
மாநில பல்கலைக்கழகச் சட்டங்கள்
ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி பல்கலைக்கழக சட்டங்களை கொண்டு, அந்த மாநிலத்தின் ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்தன. இது பெரும்பாலும் 1950களில் இருந்து 1970ம் ஆண்டுகாலம் வரை நிலையாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவையும் 1970கள் மற்றும் 1980களில் உருவாக்கப்பட்டு, அவற்றின் சட்டங்களில் ஆளுநரே வேந்தராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் மொத்தம் 1114 கல்வி நிறுவனங்களைக் கொண்ட ஒரு பரந்த பல்கலைக் கழக வலைஅமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பல்கலைக் கழகங்களை பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை, மத்திய பல்கலைக் கழகங்கள், மற்றொன்று மாநிலப் பல்லகலைக் கழகங்கள்.
The post பல்கலைக்கழகங்களுக்கு இனி முதல்வர்தான் வேந்தர் appeared first on Dinakaran.