வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

*அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் : வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் இரத்தினசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை, வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அதன்படி உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ், உப்பு சர்க்கரைக் கரைசல், எலுமிச்சைச்சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும். மது, தேநீர், மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது உடன் குடிநீர் கொண்டு செல்லவேண்டும்.

புரதம், மாமிச சத்துள்ள காரவகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்குமாறும், சர்க்கரை நோய், இருதய நோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவார்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கு மயக்கம் வருதல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தோன்றினால் அவ்வாறு வெப்பத்தால் தாக்கப்பட்டவரை நிழலான பகுதியில் இளைப்பாறவைத்து, குடிநீர், எலுமிச்சைசாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை கொடுத்து உடலின் வெப்பத்தை சீராக கொண்டுவரவும். அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதியவர்களுக்கான வழிமுறைகள்:

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

கால்நடைகளுக்கான வழிமுறைகள்:

கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டவேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்கவேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: