நரம்பு தளர்ச்சி அறிகுறியும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித உடலில் ஏற்படுகிற பெரும்பாலான நோய்களுக்கு நரம்பு மண்டலம்தான் காரணம். நமது நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்தின் துணையோடுதான் பிற உறுப்புகளை இயக்குகிறது. இதனால், மூளை சார்ந்த பிரச்னைகளாலோ அல்லது நரம்பியல் கோளாறுகளாலோ உடம்பின் எந்தப் பகுதியிலும் எந்த விதமான நோய்களும் வரலாம்.

தலைவலி, கட்டிகள், பக்கவாதம், ரத்தக்கொதிப்பு, மயக்கம், கை நடுக்கம் என இன்னும் பல நோய்களுக்கும் மூளைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதேபோல, நரம்பு சார்ந்து வருகிற எந்த நோயையும் மக்கள் பொதுப்படையாக நரம்பு தளர்ச்சி என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக கை நடுக்கத்தைக் கூட நரம்பு தளர்ச்சி என்று தவறாக புரிந்துகொள்ளும் பலர் இருக்கிறார்கள். உண்மையில் நரம்பு தளர்ச்சி என்றால் என்ன? நரம்பியல் சார்ந்த நோய்களுக்கும் நரம்பு தளர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.. நரம்பு தளர்ச்சிக்கு தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் பாஸ்கரன்.

சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அலோபதியில் நரம்பு தளர்ச்சி என்ற வார்த்தைக்கு இதுதான் நோய் என்று எதையும் வரையறுக்க முடியாது. ஏனெனில், ஆயுர்வேதா, சித்தா போன்ற மருத்துவத்தில் இருந்து உருவான வார்த்தைதான் இந்த நரம்பு தளர்ச்சி. அலோபதியில் நரம்பு சார்ந்து வருகிற ஒவ்வொரு நோய்களுக்குமே வேறுவேறு பெயர் இருக்கிறது. எந்த ஒரு குறிப்பிட்ட நோயையும் நரம்பு தளர்ச்சி என அலோபதியில் சொல்ல முடியாது. பொதுவாக பார்த்தோமேயானால் கை நடுக்கத்தை கூட நரம்பு தளர்ச்சி என பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நடுக்கம் சார்ந்த நோய் உடம்பின் எந்தப் பகுதிகளில் வேண்டுமானாலும் வரலாம்.

அதாவது, கை நடுக்கம், தலை நடுக்கம், கால் நடுக்கம் என இந்த நடுக்கம் உடம்பின் எந்தப் பகுதியிலும் வரலாம். இந்த நடுக்கத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாம் எந்த வேலையும் செய்யாதபோது வருகிற நடுக்கம். சாதாரணமாக அமர்ந்திருக்கும்போதோ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதோ உடம்பின் ஒரு பகுதி மட்டும் நடுங்கிக் கொண்டே இருக்கும். இதனை ஆங்கிலத்தில் REST TREMOR என்போம். மற்றொன்று, ஏதாவது வேலையைச் செய்யும்போது வருகிற நடுக்கம். உதாரணத்திற்கு கையில் ஒரு பொருளை எடுக்கும்போதோ அல்லது பேனாவால் ஒன்றை எழுதத்துவங்கும் போது வருகிற நடுக்கம். இது ACTION TREMOR. இந்த ஆக்‌ஷன் ட்ரெமர் பல வகைகளில் வெளிப்படும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இந்த வகையான நோய்கள் நரம்பியல் கோளாறுகளாலும் வரலாம். நரம்பு மண்டலத்தை வழி நடத்துகிற மூளை, தண்டுவட பிரச்னைகளாலும் வரலாம்.

நடுக்கம் சார்ந்து வருகிற நோயானது தினசரி பழக்க வழக்கங்களில் இருந்து ஒருவருக்கு ஏற்படலாம். பரம்பரை வியாதியாகவும் இருக்கலாம். இன்னும் சிலர் வேறுவேறு நோய்களுக்கு மருந்துகள் சாப்பிடும்போது அந்த மருந்தின் பக்க விளைவாக இந்த நடுக்கம் ஏற்படலாம். அதேபோல், குடிப்பழக்கம் உடையவர்கள் அதிகமாக ஆல்கஹால் அடிக்ட் ஆக இருப்பவர்களுக்கு இந்த நடுக்கம் வரலாம். அந்த குடிப்பழக்கத்தை திடீரென நிறுத்துபவர்களுக்கும் இந்த நடுக்கம் வரலாம். சிறுமூளை பாதிப்பு அடைந்தால் கூட நடுக்கம் சார்ந்த நோய் வர வாய்ப்பு உள்ளது. இப்படி நடுக்கம் பலவிதமான காரணத்தினால் வரலாம். ஆனால், இவை அனைத்தையுமே நரம்பு தளர்ச்சி என்கிற பெயரால் அழைக்கக்கூடாது.

நடுக்கம் சார்ந்த நோய்களால் பாதிப்படைந்தவர்கள் முதலில் எந்த உறுப்பு நடுங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின், அந்த நடுக்கம் நாம் வேலை செய்யும்போது வருகிறதா அல்லது எந்த வேலையும் செய்யாது இருக்கும்போது வருகிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வேறு ஏதாவது மருந்துகளின் பக்கவிளைவாக இந்த நடுக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து தெளிவடைய வேண்டும்.

குறிப்பாக பரம்பரை நோயாக இந்த நடுக்கம் ஒருவருக்கு ஏற்படும்போது, அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, கை, கால்களோடு உடம்பும் நடுங்கும். சிலருக்கு பேசும்போது குரலும் நடுங்கும். தொடர்ந்து நடமாட முடியாமல் உரையாட முடியாமல் நிறைய சிரமத்திற்கு ஆளாவார்கள். அவர்களெல்லாம் நிச்சயமான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஜெனிடிக்கில் இருந்து வருகிற இந்த நடுக்கத்தை குறைக்கத்தான் முடியுமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது.

அதுதவிர, மற்றவர்களுக்கு சாதாரணமாக வருகிற இந்த நடுக்கத்தை அது ஏன் ஏற்படுத்துகிறது என்ற காரணத்தை தெரிந்துகொண்டு நடுக்கத்தில் இருந்து விடைபெறலாம். உதாரணத்திற்கு பல வகையான மாத்திரைகள் சாப்பிடுவதால் நடுக்கம் வந்தால் மாத்திரையின் அளவை குறைத்துக்கொண்டோ அல்லது மாத்திரையை மாற்றியோ நடுக்கத்தை கட்டுப்படுத்தலாம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் நடுக்க நோயில் இருந்து வெளியேறலாம்.

பொதுவாக, அறுபது வயதுக்கு மேல் இருக்கிறவர்களுக்கு இந்த நடுக்கம் வரலாம். அப்படி வந்தால் அதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது வயது முதிர்ச்சியால் வரக்கூடிய நடுக்கமாக இருக்கலாம். இந்த நடுக்க நோய்க்கு உயிரை கொல்லும் அளவு சக்தி இல்லை என்றாலும் தினசரி வாழ்வில் இதனால் மன உளைச்சல்களோ சிக்கல்களோ ஏற்படலாம். அதனால், நோய் அறிந்து அதை குணப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார் டாக்டர் பாஸ்கரன்.

தொகுப்பு: ச. விவேக்

The post நரம்பு தளர்ச்சி அறிகுறியும் தீர்வும்! appeared first on Dinakaran.

Related Stories: