கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அரசு மருத்துவமனை எதிரே தற்காலிக பசுமை பந்தல் அமைக்க வேண்டும்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருசக்கர வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே கர்ப்பிணி பெண்கள், வயதானவர்களின் நலன் கருதி தற்காலிக பசுமை பந்தல் அமைக்க போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சியானது மாவட்ட தலைநகரமாக அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த வேலைக்காக கள்ளக்குறிச்சி நகரத்திற்கு அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர். அரசுதுறை அதிகாரிகளை சந்திக்கவும் மேலும் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட தலைநகரத்திற்கு மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகரத்தில் துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு, காந்திரோடு, கச்சேரி சாலை ஆகிய நான்கு சாலைகளையும் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகதான் மற்ற கிராமங்கள் மற்றும் நகரத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சாலை வழியாக அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல்காற்று வீசுவதால் வாகனத்தில் செல்லவே முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் வாகன நெரிசலை குறைக்க கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் ஒவ்வொரு சாலையில் இருந்தும் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் வாகனங்களை ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடம் சாலையில் நிறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

அப்படி வாகனங்களை நிறுத்தி அனுப்பும்போது கடுமையான வெயிலின் தாக்கத்தால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், கை குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் நான்குமுனை சந்திப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதி சாலையை கடக்க வெகு நேரம் ஆவதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் சிகிச்சைக்கு அதிகப்படியானோர் வந்து செல்கின்றனர். அதில் அரசு மருத்துவமனை எதிரே பஸ்சிற்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் மூதாட்டிகள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் நலன் கருதி நான்குமுனை சந்திப்பு பகுதி மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் தற்காலிக பசுமை பந்தல் அமைக்க போக்குவரத்து காவல்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை, புதுவை உள்ளிட்ட நகர பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிக பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், பழ ஜூஸ் வழங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பிரதான சாலை வழியாக செல்கின்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடுமையான வெயில் நேரங்களிலும் வாகன போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் தொடர்ந்து பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபடுகின்றனர்.

எனவே, வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீசார் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் தொப்பி அணிந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் நீர்மோர், பழ ஜூஸ் வழங்கிடவும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அரசு மருத்துவமனை எதிரே தற்காலிக பசுமை பந்தல் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: