தெரு நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு

ராமேஸ்வரம், ஏப். 4: ராமேஸ்வரம் கெந்தமாதனபருவதம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 18 ஆடுகளை நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல பட்டியில் அடைத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறின. இதில் 18 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.நேற்று காலை வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வந்த பாலமுருகன், தனது ஆடுகள் அனைத்தும் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால் தனக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு ரத வீதியில் பக்தர் ஒருவர் தெரு நாய் கடித்து காயமடைந்தார். இரவு நேரங்களில் கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்கள் டூவீலர்களில் செல்வோரை விரட்டுவதால் தடுமாறி விழுந்து காயமடையும் நிலையும் தொடர்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தெரு நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: