காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு சமையல் காஸ் ஏற்றும் பணி பாதிப்பு: கோரிக்கை நிறைவேறாமல் வாபஸ் பெற மாட்டோம் என அறிவிப்பு

நாமக்கல்: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 2வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பால், சமையல் காஸ் ஏற்றப்படவில்லை. நாடு முழுவதும் சமையல் காஸ் வினியோகம் செய்யும் பணியை ஒன்றிய அரசின் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. நடைமுறையில் உள்ள வாடகை ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. இதையொட்டி புதிய வாடகை டெண்டரை ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் முதல் தென் மண்டலம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் மங்களூர், கொச்சி, விசாகப்பட்டிணம், சென்னை, பாலக்காடு, எரியூர் உள்ளிட்ட 11 எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக காஸ் லோடு ஏற்றாததால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவையில் நேற்று முன்தினம் மாலை ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் நேற்று 2 வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.

இதுகுறித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மட்டத்தில் எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. ஸ்டிரைக்கை கைவிடுங்கள், பேசலாம் என கூறினார்கள். அதற்கு மறுத்துவிட்டோம். கடந்த 2 நாளில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் 1200 லாரிகளில் சமையல் காஸ் ஏற்றப்படவில்லை. இதனால் லாரிகள் பிளாண்டுகளின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் 55 இடங்களில் பாட்டிலிங் பிளாண்டுகள் அமைந்துள்ளன. சேலம், கோவை, ஈரோடு, திருச்சி போன்ற பகுதியில் உள்ள பாட்டிலிங் பிளாண்டுகளில் லோடு இறக்கிய நிலையில் சுமார் 1000 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து எங்களை தொடர்பு கொண்டு, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறும்படி கேட்டுவருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறாமல் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை. குறிப்பாக லோடு ஏற்றி வரும்போது எடை குறைவு ஏற்பட்டால் அபராதம் செலுத்தவேண்டும். கிளீனர் நியமிக்கவேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை தளர்த்தவேண்டும். சென்னைக்கு நேற்று கப்பலில் கொண்டுவரப்பட்ட, சமையல் காஸை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு பாதிப்பு உடனடியாக வராவிட்டாலும் இரண்டு, மூன்று நாட்களில் ஏற்படும். ஆயில் நிறுவனங்களுக்கு வேறுவிதமான பாதிப்புகள் தற்போது ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

The post காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு சமையல் காஸ் ஏற்றும் பணி பாதிப்பு: கோரிக்கை நிறைவேறாமல் வாபஸ் பெற மாட்டோம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: