விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உரம், யூரியா தயாரிக்கும் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த உர கம்பெனியில் இருந்து வெளிவரக்கூடிய புகை மற்றும் நச்சு அதிக அளவில் வருவதாலும். காற்றில் பரவுவதாலும் மாமந்தூர், சித்தானங்கூர் அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கேன்சர், அலர்ஜி, அரிப்பு உள்ளிட்ட பல நோய்கள் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 15க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் நேற்று இரவு உரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இந்த உரம் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து வெளிவரக்கூடிய நச்சு புகையினால் மூச்சு திணறல், அரிப்பு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வந்து எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். இதனால் கம்பெனியை உடனடியாக மூட வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஆவேசமடைந்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (55) என்பவர், தன்னுடைய மனைவி கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாக கூறி கேனில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் உடல்மேல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் பொதுமக்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post உர தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையினால் மூச்சு திணறல்: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.