காமராஜர் பெயர் சூட்டப்பட்ட திருத்தணி புதிய மார்க்கெட் கட்டிட பணிகள் நிறைவு: விரைவில் திறப்பு விழா


திருத்தணி: திருத்தணியில் ரூ3 கோடி மதிப்பீட்டில், காமராஜர் பெயர் சூட்டப்பட்ட அதிநவீன மார்க்கெட் கட்டிடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. திருத்தணி ம.பொ.சி. சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நாளடைவில் இக்கட்டிடம் பலவீனமடைந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்பட்டது. இதனால், புதிய கட்டிடம் கட்ட நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கலைஞரின் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த புதிய மார்க்கெட் கட்டிடத்தில் 97 அறைகள், தொழிலாளர்கள் ஓய்வு அறை, வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பிட வசதி, பொதுமக்கள் வியாபாரிகள் வந்து செல்ல காற்றோட்டமான இடவசதி போன்றவை உள்ளன. இந்தநிலையில் புதிய கட்டிடத்தின கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும், ம.பொ.சி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மார்க்கெட் பகுதியில் சாலையை விரிவுபடுத்தி வாகனங்கள் வந்து செல்லவும், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்திற்கு வியாபாரிகள் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கோரிக்கையை ஏற்று பெருந்தலைவர் காமராஜர் நாளாங்காடி என்று பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்டிடம் திறப்புவிழா விரைவில் நடைபெற உள்ளதால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய கட்டிடம் திறப்பு விழா குறித்து நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி கூறுகையில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், தொழிலாளர்கள் ஓய்வு அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதனை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என்றார்.

The post காமராஜர் பெயர் சூட்டப்பட்ட திருத்தணி புதிய மார்க்கெட் கட்டிட பணிகள் நிறைவு: விரைவில் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: