திருக்காட்டுப்பள்ளி, மார்ச்15: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை ஸ்ரீசித்தேஸ்வரர் கோயிலில் மாசிமாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்தேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்கானூரை மையமாகக் கொண்டு திருக்கானூர், திருப்புதகிரி, திருச்சடைவளந்தை,திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி ஆகிய ஏழுசிவன் கோவில்களை உள்ளடக்கி நடைபெறும் சத்தஸ்தான (ஏழூர்) திருவிழா மிகச்சிறப்பான ஒன்றாகும்.
இக்கோயிலில் தினசரி வழிபாடுகளும், பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு வழிபாட்டில் சுவாமி, அம்மனுக்கு பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புது வஸ்திரம் சாற்றி, புஷ்ப அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமிக்கு சிவபுராணம், கடை முடி பதிகம் பாடியும், அம்மனுக்கு சகஸ்ரநாம பாராயணம் செய்தும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
