குளத்தூர், பிப். 27: குளத்தூர் -முத்துராமலிங்கபுரம் இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். குளத்தூரில் இருந்து முத்துராமலிங்கபுரத்திற்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிராமச்சாலை கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து இச்சாலை புதிதாக அமைக்க டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் பெயர்த்தெடுத்து ஜல்லிகள் விரிக்கப்பட்டது. ஜல்லி விரிக்கப்பட்டதோடு மேற்கொண்டு சாலை பணிகளை தொடர்ந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் இப்பகுதி முழுவதும் விவசாய பகுதி என்பதால் விவசாயப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை மற்றும் ஆட்களை கூட்டிச் செல்ல விவசாயிகள் வாகனங்களை உபயோகப்படுத்துவர். சாலை சீரமைக்க விரித்த ஜல்லியால் வாகனங்கள் செல்ல வழியில்லாத அவலநிலையாக காட்சியளித்தது. 6 மாதங்களாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் முத்துராமலிங்கபுரம், ஊசிமேசியாபுரம், த.சுப்பையாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயம் மற்றும் தங்களது அத்தியவாசிய தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு குளத்தூர் வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இப் பகுதி பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து கடந்த மாதம் சாலை பணிகள் மீண்டும் துவங்கியது. செம்மண் சரள் கொட்டப்பட்தோடு சாலை பணிகளும் மீண்டும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமம், விவசாயப் பணிகளுக்கு வாகன போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு துரிதகதியில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குளத்தூர் – முத்துராமலிங்கபுரம் இடையே கிடப்பில் போடப்பட்ட சாலை பணி appeared first on Dinakaran.
