விருத்தாசலம், பிப். 27: திடீர் தீ விபத்தில் விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசமாயின. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கும், ஆலடி சாலைக்கும் இடையே உள்ள காலி இடத்தில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றுக்கு சொந்தமான நீர் மோட்டாருக்கு பயன்படுத்தும் பைப்புகள் டன் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் அதிகளவு குப்பை மேடுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று இப்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. குப்பைகளில் எரிந்த தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பைப்புகளும் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. அனைத்தும் பிளாஸ்டிக் பைப்புகள் என்பதால் அதிலிருந்து கிளம்பிய ஒருவித துர்நாற்றத்துடன் கூடிய புகை நெடி அப்பகுதி முழுக்க வீசி பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தியது.
சுமார் 100 அடி உயரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் முதல் அருகில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் ஓடி வந்து வேடிக்கை பார்த்தனர். மேலும் பயங்கரமாக தீ பரவி எரிந்ததால் அப்பகுதியில் செல்லும் தெரு மின் விளக்கின் மின் கம்பிகள் வெப்பம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்தன. அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் வெப்பத்தால் உருகி கீழே கொட்டின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால், விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை முழுவதும் அணைத்தனர்.
இதில் சுமார் ₹10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைப்புகள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஆலடி சாலையில் வந்த வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க வாகனங்களை நிறுத்தி விட்டு குவிந்ததால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து அனுப்பியதுடன் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீப்பிடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே அடுக்கி வைத்திருந்த ₹10 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.
