ராமநாதபுரம்,பிப்.27: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் விடிய, விடிய சிறப்பு வழிபாடு நடந்தது. திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலில் மூலவருக்கு 6 கால சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. மாணிக்கவாசகர் சன்னதியில் சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து திருவாசகம் பாராயனம் நடந்தது. மேலும் ஆதிசிதம்பரம் எனப்படும் உலக புகழ்பெற்ற ஒற்றைக்கல்லால் ஆன பச்சைநிற மரகத நடராஜர் சாமி உள்ள சிறப்பு வாய்ந்த தலம் என்பதால், ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடந்தது. புதிய நாட்டிய மாணவிகளின் அரங்கேற்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானம் அறங்காவலர்கள் அபர்ணா நாச்சியார், அஸ்மிதா நாச்சியார் தலைமை வகித்தனர். திவான் பழனிவேல் பாண்டியன் வரவேற்றார்.
இதில் பெங்களூர்,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 100 பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடன மாடினர். விடிய, விடிய நடந்த பரதநாட்டியத்தை பக்தர்கள், பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் செய்திருந்தது. இதுபோன்று ராமநாதபுரம் மீனாட்சி உடனுரை சொக்கநாதருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிற்கு ஒருமுறை சிவலிங்கத்தை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். திருஉத்தரகோசமங்கை அருகிலுள்ள எக்கக்குடி சூட்டுக்கோல் செல்லப்பாச்சாமி ஜீவசமாதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சாயல்குடி அருகே மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர், அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், மேலச்செல்வனூர் புலிஈஸ்வரர் ஆகிய கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 6 கால சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் சிவபுராணம், திருவாசகம், திருமுறை, திருபதிகம் பக்தி பஜனைகள் பாடினர். ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. சாயல்குடி கைலாசநாதர் கோயில் கருவறையில் உள்ள மூலவரை நள்ளிரவில் பக்தர்கள் வலம் வந்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடந்தது.
ஆப்பனூர் மாணிக்கவள்ளி, எம்.கரிசல்குளம் வில்வநாதன், இளஞ்செம்பூர் இருளாயிஅம்மன், கீரனூர் இருளப்பசாமி, பொதிகுளம் ஊர்காவலன், ராமநாதபுரம் கூரிசாத்த ஐய்யனார் உள்ளிட்ட ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர் பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள சைவ வழிபாடு கோயில்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. பொதுமக்கள் இரவு முழுவதும் தங்கி சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை முதல் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். மொட்டையடித்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா; விடிய, விடிய சிறப்பு வழிபாடு: நாட்டியாஞ்சலியில் அசத்திய மாணவிகள் appeared first on Dinakaran.
