நீர்பிடிப்புகளில் மழையில்லாததால் மூல வைகை வறண்டது: வெயிலின் தாக்கமும் அதிகரிப்பு

 

வருசநாடு, பிப். 26: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும் மூல வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரானது, மூல வைகை ஆற்றுப்பகுதியில் ஓடை உள்ளிட்ட சிறு ஆறுகள் மூலமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு சென்றடைகிறது. நடப்பாண்டில் பருவமழைக் காலங்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்து விட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மூலவைகை ஆற்றுப் பகுதி நீரோட்டம் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் முக்கிய நீர்வரத்து ஆறாகவும், 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மூலவைகை ஆறு உள்ளநிலையில் கோடை தொடங்கும் முன்னரே, வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

The post நீர்பிடிப்புகளில் மழையில்லாததால் மூல வைகை வறண்டது: வெயிலின் தாக்கமும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: