தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து சிறுவர்கள், பெண்கள் உட்பட 10 பேர் காயம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதிய விபத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.குன்றத்தூர் அடுத்த மணிமேடு, ஆகாஷ் நகர் அண்ணா தெருவை சேர்ந்த ஸ்ருதி (26) என்பவருக்கும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (29) என்பவருக்கும், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், கலந்து கொள்வதற்காக குன்றத்தூரில் இருந்து பெண் வீட்டார் சுமார் 50 பேர், தனியார் பேருந்து மூலம் குடியாத்தம் சென்றிருந்தனர். பேருந்தை அரக்கோணத்தை சேர்ந்த வினோத் (40) என்பவர் ஓட்டினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், இரவு அனைவரும் குன்றத்தூரில் உள்ள தங்களது வீடுகளுக்கு அதே பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது, குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தனியார் பேருந்து சாலை தடுப்பில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த, விபத்தில் பேருந்தில் இருந்த பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்து அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய முதல்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் வினோத் தூக்கக் கலக்கத்தில் பேருந்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து சிறுவர்கள், பெண்கள் உட்பட 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: