பொன்னேரி-கவரப்பேட்டை இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் : எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


பெரியபாளையம்: பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், ஆந்திரா வழியே வட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, இம்மாதம் முழுவதும் ஓரிருநாள் இடைவெளி விட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதனையடுத்து, சென்னை கூடூர் ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ள சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சென்னையில் இருந்து கூடூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்களை வெட்டி எடுத்து அவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்த ஜல்லி கலவைகளை அப்புறப்படுத்தி, அதன் உறுதித் தன்மையை சோதித்து மீண்டும் அதன் மீது தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து, தண்டவாளத்தில் மண் உறுதித் தன்மை இல்லாத இடங்களில் சோதனை மேற்கொண்டு, அங்கு ஜல்லி கலவைகளை கொட்டி, அதன் உறுதித்தன்மையை சோதித்த பின் மீண்டும் அதில் தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன.

இதுகுறித்து, சென்னை கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் அங்கூர் சவுஹான் கூறியதாவது : கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே, சுமார் 2 கிமீ தூரத்திற்கு இரு வழிப்பாதைகளிலும் தண்டவாளத்தை அகற்றி, அவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக நேற்று 100 மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடைபெற்றது. தொடர்ச்சியாக இந்த மாதம் முழுவதும் ஓரிரு நாள் இடைவெளி விட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் காரணமாக ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம்போல் செல்லும் பாதையில் சென்று வருகின்றன என்றார்.

The post பொன்னேரி-கவரப்பேட்டை இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் : எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: