பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி


செங்கல்பட்டு: மதுராந்தகம் தாலுகா தேவாத்தூர் அடுத்த நெட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (57). இவர் தமிழ்நாடு மின்சார துறையில் வயர்மேன் ஊழியர். இவர், கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 12 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி பகல் 1 மணியளவில் ரெட்டிபாளையம் பாலம் அருகில் ராமு பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. உடனே, தனக்கு மயக்கமாக வருவதை சக ஊழியர்களிடம் ராமு தெரிவித்துள்ளார்.

உடனடியாக சக ஊழியர்கள் அவரை அழைத்து கொண்டு சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்று அங்கும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: