உயிருக்கு பாதுகாப்பு இல்லை என திருமண கோலத்தில் இளம் ஜோடி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக இளம் ஜோடி வேவ்வேற சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்கப்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கஜபதி. இவரது மகள் கீர்த்ததர்ஷிணி (18). இவர் படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பேஷன் டிசைனிங் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகத்தம்மன் கோயில் பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் என்பவரது மகன் ராகுல் (22) என்பவரை கீர்த்ததர்ஷிணி தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தநிலையில் இவர்களது காதல் விவகாரம் கீர்த்ததர்ஷிணி பெற்றோருக்கு தெரியவந்தது.

தன் மகளிடம் அவரது பெற்றோர் காதலை கைவிடுமாறு எடுத்துக்கூறியும், தனது காதலை கைவிடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் கீர்த்ததர்ஷிணிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். அதனால், தனது காதலர் ராகுலை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் ராகுலிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாம் இருவரும் உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கல்லூரிக்கு செல்வதாக கூறி ராகுலுடன் மேல்மலையனூர் வேம்பாத்தம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், காதல் ஜோடி கீர்த்ததர்ஷிணி ராகுல் ஆகியோர் நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை.

எனவே, எங்களது பெற்றோரை அழைத்து பேசி எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் கீர்த்ததர்ஷிணி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இருவரது பெற்றோரையும் அழைத்து பேசி கீர்த்ததர்ஷிணி மற்றும் அவரது காதல் கணவர் ராகுல் ஆகிய இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்களது விருப்பத்திற்கேற்ப டிஎஸ்பி புகழேந்திகணேஷ் கீர்த்ததர்ஷிணியை அவரது காதல் கணவர் ராகுலுடன் அனுப்பி வைத்தார்.

The post உயிருக்கு பாதுகாப்பு இல்லை என திருமண கோலத்தில் இளம் ஜோடி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: