உல்லாசத்துக்கு அழைத்து மாணவரை தாக்கி நகை பறித்த இன்ஸ்டா தோழி: கும்பலுடன் தப்பி ஓட்டம்

சூலூர்: இன்ஸ்டாகிராமில் பழகிய கல்லூரி மாணவரை சூலூருக்கு வரவழைத்து நகையை பறித்து, கொலை வெறி தாக்குதல் நடத்திய தோழி கும்பலுடன் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர், கோவை மதுக்கரை திருமலையாம்பாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன் கவுதமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் தோழி ஆக விரும்புவதாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை ஆமோதித்து சேர்த்துக்கொண்ட மாணவர், தொடர்ந்து அந்த பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். அந்த பெண் பீளமேடு பகுதியில் தங்கி இருப்பதாகவும், ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 10 தேதி இரவு 9 மணிக்கு போன் செய்த அந்த பெண், திருப்பூரில் இருந்து சூலூர் வழியாக கோவை வந்து கொண்டிருப்பதாகவும், உங்களை உடனடியாக சந்திக்க ஆசைப்படுவதாகவும் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை நம்பிய மாணவர் சூலூருக்கு பைக்கில் வந்துள்ளார். சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அவர் வந்தபோது மீண்டும் அந்த பெண் போன் செய்து தான் காங்கயம்பாளையம் அருகே பிரபல பிரியாணி கடை அருகே சாப்பிட்டு கொண்டிருப்பதாகவும், உடனே அங்கு வந்தால் இருவரும் சாப்பிட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய மாணவர் அந்த பிரபல பிரியாணி கடை அருகே சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த பெண் மாணவரிடம், பிரியாணி கடைக்கு பின்புறம் தனது தோழி வீடு உள்ளதாகவும், அங்கு போய் ரெப்ரஷ் ஆகிவிட்டு போகலாம் என கூறியுள்ளார்.

அதன்படி அருகில் இருந்த குறுகிய சாலை வழியாக சிறிது தூரம் அந்த பெண்ணுடன் பைக்கில் சென்றார். அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 4 பேர், மாணவர் பைக்கை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி 2 பவுன் தங்க செயினை பறித்தனர். பின்னர் மாணவரை பைக்கில் ஏற்றி சூலூர் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர். அந்த கும்பலுடன் இன்ஸ்டாகிராம் தோழி கவுதமியும் தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த மாணவர், தந்தைக்கு போனில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து தர்மபுரியில் இருந்து வந்த அவர், மாணவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் மாணவர் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவரை தாக்கிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

The post உல்லாசத்துக்கு அழைத்து மாணவரை தாக்கி நகை பறித்த இன்ஸ்டா தோழி: கும்பலுடன் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: