தண்டையார்பேட்டை: பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் நகை கடை நடத்தி வருபவர் மக்கி பால் ஜெயின். இவர் உள்ளிட்ட 6 பேர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஆர்.எம்.ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வரும் சகோதரர்களான முகேஷ், மோனிஷ், சுனில் ஆகிய 3 பேர், கடந்த ஜனவரி 4ம் தேதி, எங்களது நகைக்கடைக்கு வந்து, மும்பையில் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. உங்களது நகைகளை கொடுத்தால் அதில் காட்சிப்படுத்தி விற்பனை செய்து தருகிறோம்.
மீதமுள்ள நகைகளை திருப்பிக் கொடுத்து விடுகிறோம், என்றனர். தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு சம்மதித்து, ரூ8 கோடி மதிப்பிலான 12 கிலோ நகைகளை, அந்த மூவரிடம் கொடுத்தோம். ஆனால் கண்காட்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும், எங்களிடம் வாங்கிய நகைகளை திருப்பித் தரவில்லை. அதற்குண்டான பணத்தை கேட்ட போது, அதையும் தர மறுத்து ஏமாற்றுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மும்பை கண்காட்சியில் விற்று தருவதாக கூறி ரூ8 கோடி நகை வாங்கி மோசடி: அண்ணன், தம்பி உள்பட 3 பேர் மீது புகார் appeared first on Dinakaran.