பெரம்பூர்: கொளத்தூர் சிவசக்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜீவா (எ) ஈரல் ஜீவா (29). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம், இவரது வீட்டிற்கு வந்த இவரது நண்பர்களான வாழ்வரசன் மற்றும் ரகு ஆகியோர், ‘மது அருந்தலாம் வா,’ என ஜீவாவை அழைத்து சென்றுள்ளனர். தனியாக ஒரு இடத்திற்கு சென்று, அங்கு மது வாங்கி கொடுத்து, சிறிது நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பினர். ஜீவாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இதுகுறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கொளத்தூர் உதவி கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொளத்தூர் வெங்கட் நகரை சேர்ந்த வாலி (எ) வாழ்வரசன் (23) என்பவர், ஜீவாவுடன் பழகி வந்துள்ளார். அவ்வப்போது, வாழ்வரசன் வீட்டிற்கு ஜீவா வந்து சென்றபோது, வாழ்வரசனின் மனைவியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த வாழ்வரசன், தனது நண்பர் குன்றத்தூர் ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த ரகுமான் (29) என்பவருடன் சேர்ந்து, ஜீவாவை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வாழ்வரசன் மற்றும் ரகுமான் ஆகிய இருவரை நேற்று கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மனைவியுடன் கள்ளத்தொடர்பால் ஆத்திரம்: மதுபானம் வாங்கி கொடுத்து நண்பனை வெட்டிய வாலிபர் appeared first on Dinakaran.