தஞ்சையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 3ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 4ம் தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, 5ம் தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, 6ம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. 7ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜபூஜை நடந்தது. அன்று மாலை திருக்குடங்கள் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 8ம் தேதி 2, 3ம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று 4, 5ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
இன்று (10ம் தேதி) காலை 6 மணிக்கு 6ம் கால பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. 9.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. காலை 9.30 மணிக்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்ததுடன் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்றிரவு மாரியம்மன் வீதியுலா நடக்கிறது.
கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கடந்த 3ம் தேதி கும்பாபிஷேகவிழா பட்டி விநாயகர் அனுமதியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 10.05 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து பட்டி பெருமாள், பச்சை நாயகியம்மன், நடராஜ பெருமாள், தண்டபாணி ஆகிய மூல மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு பட்டீஸ்வரர் சுவாமிக்கு பெருதிருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த 2 முறையும் திமுக ஆட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பேரூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
The post தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.
