மார்கழி மாதம் மற்றும் ஆருத்ரா தரிசனம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் விரதமிருந்து, மாலை அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் (ஜன. 12) மற்றும் நேற்றும் சுவாமி தரிசனத்துக்காக வந்து குவிந்தனர். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிநெடுகிலும் முருகர் பாடல்களை மனமுருகப் பாடி, ஆடி மேள தாளம் முழங்க சாரை சாரையாக வந்தனர்.
பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடினர். கோயிலில் இலவச பொது தரிசனம். ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் வழியுடன் இணைக்கப்பட்டுள்ள பாதயாத்திரை மற்றும் காவடி, வேல்குத்தி வரும் பக்தர்களுக்கான தனிப்பாதையிலும் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம், கடற்கரை பகுதி மட்டுமில்லாது நகரே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்றிரவு முதலே பக்தர்கள் கோயிலில் வரிசையில் காத்திருந்து இன்று நடை திறந்ததும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பொங்கலிட தங்கள் ஊர்களுக்கு திரும்பினர். மேலும் பவுர்ணமி வழிபாட்டுக்கும் நேற்றிரவு கூட கடற்கரையில் தங்கி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் நள்ளிரவிலும் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டது.
தைப் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.14) திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து கூடுதலாக நெல்லை, தூத்துக்குடிக்கு சுமார் 80 பேருந்துகள் இயக்கப்பட்டன.
காணும் பொங்கைலை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் நாளை (ஜன. 15) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. பகலில் உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயு கந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்று பாளை. சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் வைத்து கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெற்று வீதியுலா வந்த சுவாமி காட்சியளிக்கிறார்.
சாதிய அடையாளமா? பக்தர்கள் கண்காணிப்பு
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் பச்சை மயில் வாகனன் என்று போற்றப்படும் முருகப் பெருமானுக்காக விரதமிருந்து பச்சை நிற உடைகளையே அதிகமாக அணிந்து வருவார்கள். இதனால் முருக பக்தர்கள் என்றாலே பச்சை நிறம் என்பது கண்கூடாகத் தெரியும். ஆனால் சமீப காலமாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை விட கைகளில் சாதி அடையாளங்கள் தெரியும் வகையில் ரிப்பன்கள் கட்டியும், கொடிகள் ஏந்தியும் வருவது அதிகரித்துள்ளது.
இதனை தடுக்க போலீசார் திருச்செந்தூர் எல்லையில் இருந்தே பக்தர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பக்தர்கள் வரும் அலங்கார வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்ப கூடாது எனவும், கைகளில் சாதி அடையாளங்களைக் கட்டிக் கொண்டு வரக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பினர். வாகனங்களை ஒழுங்கு படுத்தவும், சன்னதித் தெருவில் வேல் குத்தி வரும் பக்தர்களுக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க போலீசார் பற்றாக்குறையாக இருந்தது. எனவே இனி வரும் காலங்களில் கூடுதலான போலீசாரை நியமித்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி திருச்செந்தூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வரத் தொடங்கினர். இதனால் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நகரின் எல்லையில் இருந்து கோயில் வரை வாகன நெருக்கடியும், அணிவகுப்புமாகவே காட்சியளித்தது. இதையடுத்து போலீசார் அரசு மருத்துவமனை வளைவில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டதால் போக்குவரத்து கட்டுக்குள் வந்தது. இதனால் நேற்று வாகன நெருக்கடியின்றி வந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வழிபட்டனர்.
கடலில் நீராட எச்சரிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் புண்ணிய தீர்த்தமான கடலில் நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல கடந்த வாரம் கடலானது சீற்றம் அதிகமாக கரையைத் தாண்டி மணல் அரிப்பு ஏற்பட்டும், அய்யா கோயில் அருகே சுமார் 50 அடி உள்வாங்கியும் காணப்பட்டது.
மேலும் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதயாத்திரை வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதாலும், நேற்று அதிகாலை 5.20 மணி முதல் இன்று அதிகாலை 4.40 மணி பவுர்ணமி இருந்ததால் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலில் ஆழமான பாறைகள் நிறைந்த இப்பகுதியில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது என அறிவுறுத்தி எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கினர்.
The post தைப்பொங்கலையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.