×

வனத்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணன், தம்பி கைது மணல் கடத்தலை தடுக்க முயன்ற விவகாரம்

ஒடுகத்தூர், ஜன.10: ஒடுகத்தூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் இந்து உத்தரவின் பேரில் வனவர் துளசிராமன், வனக்காப்பாளர்கள் பார்த்திபன் சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு சுமார் 10 மணியளவில் அரசம்பட்டு காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கானாற்று படுகை வழியாக வந்த ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அந்த கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மணல் கடத்தலை தடுக்க வந்த வனத்துறையினர் மீதும் டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்று அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனை, கவனித்த வனத்துறையினர் அங்கிருந்து நூலிழையில் உயிர் தப்பினர். பிறகு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இது சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளான அண்ணன், தம்பி பூவரசன், சிலம்பரசன் ஆகியோரை டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், அண்ணன், தம்பி இருவரும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பூவரசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வனத்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணன், தம்பி கைது மணல் கடத்தலை தடுக்க முயன்ற விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Odukatur ,Tulasiraman ,Hindu ,
× RELATED குடியாத்தம் அருகே மைனர் பெண்ணை...