×

கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கோவை: கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருபவர்கள் ரவி, ஆபிதா தம்பதியினர். இவர்கள் மூன்று சந்திப்பு அருகே மாட்டீறைச்சி உணவு கடையை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் இருக்கும் நபர் ஒருவர் இங்கே பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகியவற்றை விற்கும் கடைகளை இங்கு நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இப்பகுதியில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் விற்கக் கூடாது என மிரட்டி உள்ளார். மேலும், அடுத்த சில நாள்கள் கழித்து வந்து, ‘கடையை காலி செய்ய சொல்லி அன்றே சொன்னேன் அல்லவா… ஏன் இன்னும் கடைப் போட்டுள்ளீர்கள்?’ என மீண்டும் மிரட்டினார். அதுமட்டுமின்றி, 10 பேரை அழைத்து வந்து கடையை அடித்து உடைத்துவிடுவதாக கூறி எங்களை மிரட்டினார். இதனை ரவி – ஆபிதா தம்பதியினர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதி பாதுகாப்பு வழங்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பாதுகாப்பு வழங்கவும், அதே இடத்தில் கடையை வைக்க அனுமதிக்க கோரியும் ஆபிதா, ரவி தம்பதி ஆணையரிடம் மனு அளித்தனர். உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாஜக ஒ.பி.சி. அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது 126(2), 192, 196, 351/2 ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

The post கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Peep Biryani ,Coimbatore ,BJP ,Peep Chilli ,Udayampalayam ,Ganapathy ,Dinakaran ,
× RELATED கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு...