சென்னை: கடந்த 2011-15ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,222 பேரில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 150 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகி வந்தனர்.
வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
The post போக்குவரத்து துறை வேலை விவகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்: விசாரணை பிப். 20க்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.