ராசிபுரம், ஜன.9: ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சி, 3வது வார்டு தங்கச்சாலை வீதியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க, நேற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘புதிதாக அமைக்கும் கான்கிரீட் சாலை பழைய சாலையை விட உயரமாக அமைக்கிறார்கள். இதனால் தாழ்வாக இருக்கும் வீடுகளில் மழை காலங்களில் மழைநீர் புகுந்துவிடும். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் விசைத்தறி உபகரணங்களை ஏற்றுக்கொண்டு வரும்போது சாலை உயரமாக இருந்தால் தாழ்வாக இருக்கும் மின் கம்பியில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பழைய கான்கிரீட் சாலையை பெயர்த்து அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்’ என்றனர்.
The post சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.