×

அண்ணா பல்கலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், எந்த பின்னணியை சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று சென்னையில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக கவன ஈர்ப்புக்கு கொண்டு வந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

உறுப்பினர்களின் கருத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கே கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்கலைக்கழகத்தினுடைய பெயரை சொல்லி நீங்களெல்லாம் பேசியிருக்கிறீர்கள். ஆனால், நான் அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி, அந்த பெயருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், எங்களையெல்லாம் ஆளாக்கியவர் அவர். அந்த உணர்வோடு, அந்த பெயரை தவிர்த்து, இங்கே பதிலளிக்க விரும்புகிறேன். சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம்.

இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதை பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தை தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணிநேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தபிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும் அரசை குறை சொல்வது, அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவது இல்லை. 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதியப்பட்டுக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மறுநாள் காலையிலேயே குற்றவாளி ஞானசேகரன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை. இருந்தாலும், எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகிறார்கள். அதற்குக் காரணம் யார்? ஒன்றிய அரசின்கீழ் செயல்படுகிற NIC – தேசிய தகவல் மையம். அது நம்முடைய காவல் துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கு பின்னால் அந்த தொழில்நுட்ப கோளாறும் சரிசெய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அந்த நிறுவனமும் விளக்கம் கொடுத்து, NIC-யிலிருந்து கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

அடுத்து, பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவா சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தை சுற்றியிருக்கிற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள் உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். மூன்றாவது குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, ‘யார் அந்த சார்?’ என்று கேட்கிறார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுதான் இப்போது இந்த புகாரை விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்; அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது – ‘யார் அந்த சார்?’ என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்பு புலனாய்வு குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள், அதைச் சொல்லுங்கள்.

அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இந்த அரசை பொறுத்தவரைக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் இருப்பது போல ஒரு சதித் தோற்றத்தை உருவாக்க பலர் முயற்சி செய்கிறார்கள். நான் நிச்சயமாக சொல்கிறேன்; இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது.

ஏனென்றால், நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து பார்த்திருப்பீர்கள் – பெண்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 86 விழுக்காட்டிற்கு மேலாக, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை, வீண்பழியை சுமத்தாமல் இருந்தால், அதுவே போதும்.

உயர்நீதிமன்றமே, எதிர்க்கட்சி வழக்கறிஞரை பார்த்து, “பெண்களின் பாதுகாப்பு தொடர்பான உண்மையான அக்கறையோடு செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த வழக்கில் ஏன் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுகிறீர்கள்?” என்று கேட்டதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்ற அறிவுரையை பின்பற்றி, வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பிற்கு பேருதவியாக இருக்கும். உயர்நீதிமன்றம் அமைத்திருக்கிற சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முழு வீச்சில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும், எந்த பின்னணியை சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக நாங்கள் எடுப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, நான் பணிவோடு கேட்டுக்கொள்வது, திமுக. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியை கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.

நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது – ‘யார் அந்த சார்?’ என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாகவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்பு புலனாய்வு குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள், அதைச் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.

* அன்றைய ‘முதல்வர் சார்’ ஆட்சியில் என்ன நடந்தது?
மனசாட்சி இல்லாமல், பெண்களின் பாதுகாவலர்கள் மாதிரி பேசுபவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதல்வர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: பொள்ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் இல்லை; தொடர்ச்சியாக பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகளை 2 வருடங்களாக ஒரு கும்பல் செய்து வந்திருக்கிறது. அன்றைய அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ-வசம் இந்த வழக்கு சென்ற பிறகுதான் உண்மைகள் வெளிச்சத்துக்கே வந்தது.

பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி, தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார். பிரச்னைக்குரிய 4 பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என்று புகார் கடிதம் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதியவில்லை; எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் ‘சார்’ ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம்.

அதுமட்டுமா? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அப்படியே குற்றம் செய்தவர்களிடமே கொடுத்து விட்டார்கள். இதையடுத்து அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்குகிறார். அந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அதிமுக அரசு. பிரச்சினை பெரிதாகிறது என்று தெரிந்ததும், இதிலே சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், ஏதோ 3 பேரை கைது செய்து கணக்கை முடிக்கப் பார்த்தார்கள். ஆனால், சிபிஐ விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று அன்றைய அதிமுக அரசு ஒரு பெரிய நாடகம் ஆடியது. (அப்போது அதிமுகவினர் எழுந்து நின்றனர்)

நீங்கள் உட்காருங்கள். நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம் அல்லவா? அதைப்போல் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். இதனால்தான் ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று நான் அப்பொழுதே சொன்னேன்”என்றார். முதல்வரின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களை பார்த்து கேள்விகளை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய ‘சார்’ங்க எல்லாம் பேட்ஜ் அணிந்து கொண்டு உட்கார்ந்திருந்து, இப்பொழுது பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும். ஒரு முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர், தன் பொறுப்பையும் தகுதியையும் மறந்து, பேட்ஜ் அணிந்து வந்தது, அரசியலில் எந்தளவுக்கு தாழ்ந்து போகவும் தயாராக இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றார் முதல்வர்.

The post அண்ணா பல்கலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chief of Legal Affairs ,K. Stalin ,Chennai ,Chief Justice of the Legislative Assembly ,Tamil Nadu Assembly Assembly ,Anna ,Chief Legal Officer ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...